முன்கூட்டியே விடுதலையான மேலவளவு கொலை வழக்கு குற்றவாளிகள் வேலூரில் தங்கியிருக்க உத்தரவு

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 13 பேரும் வேலூர் மாவட்டத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அருகேவுள்ள மேலவளவு பஞ்சாயத்தின் தலைவராக இருந்த முருகசேன் உட்பட 7 பேர் கடந்த 1997-ம் ஆண்டு கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரை தண்டனைக்காலம் முடியும் முன்பே நன்னடத்தை அடிப்படையில் விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ், பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொலை வழக்கு குற்றவாளிகள் 13 பேர் எதனடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறித்து பதில் மனுதாக்கல் செய்ய உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

இதனடிப்படையில் அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கைதிகளை முன்கூட்டியே விடுவித்ததில் எந்த முன்னுரிமையும் பின்பற்றப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி ஆயிரத்து 649 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதனடிப்படையிலேயே 13 பேரையும் விடுதலை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

13 பேர் விடுதலைக்குப் பிறகு சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.

அத்துடன் குற்றவாளிகள் அனைவரும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தண்டிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் ஓராண்டுக்கு முன்பே விடுதலை செய்யப்பட்ட போதிலும் மேலவளவு கிராமத்தில் அவர்களால் எந்த பிரச்னையும் எழவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மாலை 4 மணிக்கு இந்த வழக்கில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

அதில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் மேலவளவு கிராமத்திற்குள் செல்ல தடை விதித்து உத்தரவிட்டனர்.

அவர்கள் அனைவரும் வேலூர் மாவட்டத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் மாதம் இரு முறை வேலூர் மாவட்ட நன்னடத்தை அதிகாரி முன்பும், மற்ற இரு வாரங்களில் எஸ்.பி முன்பும் 13 நபர்களும் ஆஜராக வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.

வேலூரில் தங்கியிருக்கும் குடியிருப்பு முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை எஸ்பி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். பாஸ்போர்ட் இருப்பின் அதனை மதுரை எஸ்.பியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை மேலவளவு விவகாரத்தை முன்நிறுத்தி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே