ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்..!!

சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லம் முன் திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்..

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லம் முன்பு காலை முதலே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.

தலைவனை தரிசித்தால் தான் தங்களுக்கு உண்மையான தீபாவளி என்றும் தலைவரை பார்க்காமல் போகமாட்டோம் எனவும் கூறி அங்கேயே காத்திருக்கத் தொடங்கினர்.

கொரோனா காலம் என்பதால் இப்போது வேண்டாம் என ரஜினி இல்ல பாதுகாப்பு ஊழியர்கள் எடுத்துக் கூறியும் ரசிகர்கள் அதைக் கேட்பதாக இல்லை.

ரஜினியை வாழ்த்து முழக்கம் எழுப்பியவாறு நின்று கொண்டிருந்தனர்.

இந்த தகவல் ரஜினிகாந்த் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து காலை 9.30 மணியளவில் ரசிகர்களை சந்திக்க தயாரானார் அவர்.

இதையடுத்து முகக்கவசம் அணிந்தவாறு வீட்டின் சுற்றுசுவருக்குள் நாற்காலி போடப்பட்டு அதில் ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்தார் ரஜினி.

மேலும், எல்லோரும் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுங்க என ரஜினி கூறிய வாழ்த்தால் நெகிழ்ந்து போன அவரது ரசிகர்கள் ரசிகர் மன்ற கொடியை தாங்கியவாறு தலைவா.. நீ வா தலைவா.. என முழக்கம் எழுப்பினர்.

ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு மீண்டும் ஒரு முறை அவர்களை நோக்கி கையசைத்த ரஜினி ஓரிரு நிமிடங்களில் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

சுமார் 5 அடி இடைவெளியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தீபாவளியன்று பொதுமக்கள் கோயில்களுக்கு செல்வது வழக்கம்.

ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை தீபாவளி, புத்தாண்டு என எந்த பண்டிகையாக இருந்தாலும் போயஸ் கார்டனுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே