SPB-க்காக நடைபெற உள்ள கூட்டுப் பிரார்த்தனையில் நடிகர் ரஜினிகாந்த்…

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து அவர் குணமடைய வேண்டும் என இன்று மாலை 6 மணிக்கு பிரபலங்கள் கூட்டு பிரார்த்தனை செய்ய உள்ளனர். இதில் தானும் பங்கேற்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் , யாரும் போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார் எஸ்.பி.பி. 

அதன்பிறகு சில நாட்களில் அவர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஐசியூ-வில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

அவரின் உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் தினமும் ஆடியோ பதிவு மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தான் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவ வல்லுநர்கள் அவரை மிகவும் நெருக்கமாக கவனித்து வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், “பிரார்த்தனை மிகவும் சக்திவாய்ந்தது. நாளை(இன்று) மாலை 6 மணிக்கு உலகம் முழுவதும் உள்ள எஸ்.பி.பி ரசிகர்கள் ஒரு நிமிடம் அவர் குணமடைய பிரார்த்தனை செய்வோம். ஆயிரம் நிலவே வா என்ற பாடல் மூலம் அறிமுகம் ஆன இவர், ஆயிரம் பிறைகளை காண வேண்டாமா” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

இதனையடுத்து இயக்குநர் சந்திரசேகர், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் இந்த கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தானும் இந்த கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாடும் நிலா.எழுந்து வா. கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பியை மீட்டெடுப்போம்! 20-08-2020 இன்று மாலை 6 மணி முதல் 6.05 மணி வரை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே