நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 15ஆம் தேதி அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது பேசுபொருளானது.

தடுப்பபூசிக்கும் விவேக்குக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என சுகாதாரத் துறை விளக்கம் அளித்தது.

மேலும், தடுப்பூசி குறித்து யாரும் வதந்தி பரவக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த எச்சரிக்கையையும் மீறி நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

மன்சூர் அலிகானுக்கு எதிராக சென்னை மாநகராட்சி புகார் அளித்ததின் பேரில், சென்னை வடபழனி போலீசார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

இதையடுத்து, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார்.

முதல் முறை அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இரண்டாம் முறையாக மனு தாக்கல் செய்தார்.

மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்ப கூடாது என மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை விதித்த நீதிபதிகள், ரூ.2 லட்சம் அபராதம் தொகையை தடுப்பூசி வாங்க சுகாதாரத்துறைக்கு தர உத்தரவிட்டு முன்ஜாமீன் வழங்கினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே