EIA2020 சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு..!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 -ன் வரைவை மத்திய அரசானது கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது.

இதற்கு எதிராக பலர் கருத்து கூறி வரும் நிலையில், தற்போது நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள கருத்தை அனைவரும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அவரின் உழவன் பவுண்டேசன் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

“உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில், இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை.

ஆனால் தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு, நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த வரைவு அறிக்கையில், பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்’ என்கிற ஒரு சரத்தே.

நம் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையையும், அச்சத்தையும் உருவாக்குகிறது.

நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்?

குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்ற போதும், இந்த வரைவறிக்கை வெறும் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலேயும் மட்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது. நமது தாய் மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

எனவே, இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி. அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நாம் நிச்சயமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

[email protected] என்கிற மின்னஞ்சல் முகவரியில், ஆகஸ்ட் 11, 2020 (August 11) தேதிக்குள் நம் கருத்துக்களை பதிவு செய்வோம்.

அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்” என கூறினார்.

இது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே