பெண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு நடிகர் பாக்யராஜ் வருத்தம்

பெண்கள் பற்றி தாம் கூறிய கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக நடிகர் பாக்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி விவகாரம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக நடிகர் பாக்யராஜூக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன் அளித்திருந்தது.

அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் முன்பு நடிகர் பாக்யராஜ் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், தாம் கூறிய கருத்து பெண்களை இழிவுப்படுத்த அல்ல என்றும், தாம் எப்போதும் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தது கிடையாது என்றும் கூறினார்.

பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்த கருத்தை கூறியதாக பாக்யராஜ் தெரிவித்தார்.

தமது கருத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டனர் என்றும், அவர்களுக்கு வருத்தத்தை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், தமது பதிலை ஏற்றுக்கொண்ட விசாரணை ஆணையம் தம்மை விடுவித்ததாக பாக்யராஜ் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே