சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக சுமார் ரூ.400 கோடி செலவு – மாநகராட்சி ஆணையர்

சென்னையில் மட்டும் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்காக சுமார் ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதில் கொரோனா பரிசோதனைக்கு ரூ.200 கோடியும், களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. சென்னையில் 90 சதவீத மக்கள் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்.

ஆனால் இதுமட்டும் போதாது. அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதுதான் மாநகராட்சியின் நோக்கமாகும். சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதிகளவு பரிசோதனை செய்வதால் அதில் வரக்கூடிய தரவுகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னையில் இதுவரை 83,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 67,077 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 1,376 பேர் உயிரிழந்துள்ளனர். 14,923 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் 58.34 சதவீதம் ஆண்களும், 41.66 சதவீதம் பெண்களும் உள்ளனர்.

வயது வாரியாக பாதிப்பு விகிதம்

  • 9 வயதுக்கு உட்பட்டவர்கள் – 3.35 சதவீதம்
  • 10 முதல் 19 வயது – 7.08 சதவீதம்
  • 20 முதல் 29 வயது – 17.10 சதவீதம்
  • 30 முதல் 39 வயது – 18.76 சதவீதம்
  • 40 முதல் 49 வயது – 17.83 சதவீதம்
  • 50 முதல் 59 வயது – 15.91 சதவீதம்
  • 60 முதல் 69 வயது – 11.38 சதவீதம்
  • 70 முதல் 79 வயது – 6.24 சதவீதம்
  • 80 வயதுக்கு மேல் – 2.36 சதவீதம்

குணமடைவோர் விகிதம்

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் விகிதத்தில் தண்டையார்பேட்டை மண்டலம் முதலிடத்தில் உள்ளது.

அங்கு 88 சதவீதம் அளவிற்கு குணமடைவோர் விகிதம் உள்ளது.

அடுத்தபடியாக ராயபுரத்தில் 87 சதவீதமும், மணலியில் 85 சதவீதமும், மாதவரத்தில் 84 சதவீதமும், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, பெருங்குடியில் தலா 82 சதவீதமும் குணமடைந்துள்ளனர். மிகக்குறைவான விகிதம் (76 சதவீதம்) உடைய மண்டலமாக கோடம்பாக்கம் உள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதத்தில் மிகக்குறைவான மண்டலமாக சோழிங்கநல்லூர் உள்ளது. அங்கு 0.66 சதவீதம் என்ற ரீதியில் இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது. அடுத்த இடங்களில், மணலி (1.07), வளசரவாக்கம் (1.10), அம்பத்தூர் (1.26), மாதவரம் (1.27), ஆலந்தூர் (1.31) உள்ளன.

திருவொற்றியூர் மண்டலமானது அதிக இறப்பு விகிதம் (2.32) கொண்ட மண்டலமாக உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே