கொரோனா தடுப்பு பணி – சிவகங்கையில் டிச.4ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு..!!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் டிசம்பர் 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. 

சோதனைகள் அதிகரிக்கப்பட்டாலும் பெரிய அளவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கவில்லை.

இந்தியாவில் தமிழகத்தில் தினமும் அதிக அளவில் கொரோனா பரிசோதனை நடக்கிறது.

ஆனாலும் டெல்லி, கேரளா போல அதிக அளவில் பாதிப்புகள் பதிவாவது இல்லை. தமிழகத்தில் தினமும் 1500-க்கும் குறைவாகவே கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட  நிர்வாகங்களும் தமிழக அரசும் சேர்ந்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து  வருகிறார்.

அந்த வகையில், இதுவரை 31 மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சர் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார்.

இந்த நிலையில் வரும் டிசம்பர் 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். புதிய மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். மேலும்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறையினர், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடுகிறார்.

குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல்:

இதற்கிடையே, 24 மணி நேரமும் குடிநீர் கிடைத்திடும் வகையில் முல்லைப் பெரியாரிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவரும் புதிய குடிநீர் திட்டத்திற்கு டிசம்பர் 4-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே