முழுஊரடங்கால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்…

தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு வீடுகளிலேயே வழிபாடுகள் நடத்தப்பட்டது. முழு லாக்டவுன் இன்று அமல்படுத்தப்பட்டதால் காவிரி கரையோரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் ஆடிப்பெருக்கு (ஆடி 18) வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆடி 18-ந் தேதியன்று நீர்நிலைகளுக்கு சென்று வழிபாடுகள் நடத்துவர்.

இதனால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

ஆனால் இன்று ஞாயிறு முழு லாக்டவுன் என்பதால் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இன்றைய ஆடி பெருக்கு நாளில் ஆறுகளில் நீராடிவிட்டு மேற்கொள்ளும் தாலி கயிறு மாற்றுதல், முளைப்பாரி விடுதல் உள்ளிட்டவை நடைபெறவில்லை. 

பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே வழிபாடுகளை நடத்தினர்.

தேனியில் போலீசுடன் மல்லுகட்டு

தேனி நகரில் விதியை மீறி வருகின்ற வாகன ஓட்டிகளை காவல்துறையினர் எச்சரித்தும் நோய்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் விதிமீறல் வழக்கு பதிவு செய்தும் வருகின்றனர்.

அதேநேரத்தில் பலரும் ஆடிப்பெருக்கு என்பதனால் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர்.

இதனால் சில இடங்களில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

ஆடிபெருக்கில் உறங்கும் தூங்கா நகரம்

இன்று மதுரை மாநகரில் பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்துநிலையம், கோரிப்பாளையம், கீழமாசி பகுதியில் அனைத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது.

முழு லாக்டவுன் காரணமாக அனைத்துகள் கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளில் போலீஸ் தடுப்பு அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகிறது முக்கியமான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வெறிச்சோடிய பேரூர் படித்துறை

இன்றைய லாக்டவுனால் ஆடி பெருக்கை முன்னிட்டு பேரூர் படித்துறை மற்றும் சுற்றுவட்டார பொது இடங்களில் இறந்தவர்களுக்கான தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இறந்த முன்னோர்களை வணங்குவது, படையலிடுவது, மற்றும் கோவை பேரூர் படித்துறை மற்றும் அருகே உள்ள தனியார் திருமணம் மண்டபங்களில் ஒவ்வொரு ஆண்டும் தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும், இந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால், பேரூர் படித்துறை மற்றும் தனியார் திருமணம் மண்டபங்களில் இறந்தவர்கள் தர்ப்பணம் செய்யவும், பொது இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடியது.

கல்லணையில் குவிந்த பெண்கள்

இருப்பினும் கல்லணை கால்வாயில் தடையை மீறி பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டங்களில் பெண்கள் பெருமளவு பங்கேற்றனர்.

பெண்கள் புத்தாடை உடுத்தி, தாலிக்கயிறு மாற்றி வணங்கி சென்றனர். ஆனால் தஞ்சை நகர வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே