“ஜாதிவாரியாக கணெக்கெடுப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தனி ஆணையம் அமைக்கப்படும்” – முதல்வர் பழனிசாமி

சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.                                                                           

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்களின் அறிக்கையில்,

‘மாண்புமிகு அம்மா அவர்கள், தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பினை பெற்று தந்து, தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, ””சமூக நீதி காத்த வீராங்கனை” என்று அனைவராலும் போற்றப்படுகின்றார். 

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.  அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது. 

மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப்படுகிறது.

எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும். சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.

மாண்புமிகு அம்மா அவர்கள் சமூக நீதி காப்பதில் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தார் என்பதை நாடறியும்.  எனவே, மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்படும்.

இவ்வரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்,’ எனத் தெரிவிக்கப்பட்டுளள்து.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே