ஆந்திராவின் விசாக்கப்பட்டினம் துறைமுகம் அருகே சரக்கு பெட்டகங்களையும் கையாளும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு கப்பல்கள் மூலம் கொன்டு வரப்படும் சரக்கு பெட்டகங்களை இறக்குவதற்கு ராட்சச கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக 60 அடி உயரம் கொண்ட ராட்சச கிரேன் சரிந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து, இந்த விபத்து குறித்து உயர்மட்டக் குழு விசாரணைக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்ததால் பலர் உயிரிழந்த சம்பவத்தின் வடுக்கள் மறையாமல் இருக்கும் போது மீண்டும் ஒரு கோர சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.