கேகே நகர் தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வணிகவியல் ஆசிரியர் போக்சோ சட்டம் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பப்பட்டார்.

சென்னை கேகேநகரில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபால் (59) என்பவர் மீது புகார் எழுந்தது. ஆன்லைன் வகுப்பில் துண்டு மட்டும் அணிந்து வகுப்பு எடுத்ததும், மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தது.

இதையடுத்து பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்தது. ஆசிரியர் ராஜகோபாலை போலீஸார் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது.

இதையடுத்து போலீஸார் நேரடியாக அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. அவரது செல்போன், லேப்டாப்புகளை போலீஸார் கைப்பற்றினர். பின்னர் நேற்றிரவு இந்து காலனி நங்கநல்லூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ ( 12 of POCSO Act 2012.r/w 11(i)(ii) (iii )(iv).354(A)509 IPC 67.67A of IT Act) உள்ளிட்ட ஐபிசி சட்டப்பிரிவுகள் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவரை கைது செய்த அனைத்து மகளிர் போலீஸார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர், விசாரணைக்குபின் இன்று காலை மகிளா நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டார். அவரை ஜூன் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதின் பேரில் ஆசிரியர் ராஜகோபால் சிறையில் அடைக்கப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே