எனக்கு திருப்தியில்லாத படம் அசுரன் – வெற்றிமாறன்

அசுரன் திரைப்படத்திற்கு விருது கிடைத்தாலும் அது தனக்கு மன நிறைவைத் தராத படம் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தமைக்கு  சென்னையில் பாராட்டுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தாணு மற்றும் சக நடிகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசும் போது, அசுரன் திரைப்படம் எடுத்த போது தனக்கு மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டி இருந்ததாகக் குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபோது படத்தை வெளியிடுவதற்கான தேதி மிகக் குறுகிய காலமாக இருந்தது. தன்னால் முழுமனதோடு நிறைவாக வேலை செய்ய முடியவில்லை. ஆதலால் அசுரன் தானாகவே உருவான படம் என்று குறிப்பிட்டார். சமூகத்தில் இன்றைக்கு இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் தனக்கு முழு மனநிறைவை தராத படமாக அமைந்துள்ளது என்றார்.

தயாரிப்பாளர் தாணு, நடிகர் தனுஷ் ,மஞ்சுவாரியார்,கென் கருணாஸ் போன்ற அனைவரது பங்களிப்பும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்திருப்பதாக கூறினார். அசுரன் படத்தின் நூறாவது நாள் இன்று அதே நேரத்தில் தேசிய விருதிற்கு பாராட்டு விழா என ஒரே மேடையில் இரு நிகழ்வுகள் நடப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் வெற்றிமாறன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, வெற்றிமாறன் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம், அவரை பாதுகாக்க வேண்டியது என்னுடைய கடமை. எப்போதும் நிழல் தரும் மரமாக இருப்பேன். வெற்றிமாறனுக்கு எது வந்தாலும் பக்கபலமாக தான் இருப்பேன் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், திரை உலகில் தான் தயாரித்த வண்ண வண்ணப் பூக்கள் படத்திற்கு பாலுமகேந்திரா மூலம் ஒரு தேசிய விருது கிடைத்தது. அதன்பிறகு அவரது சிஷ்யன் வெற்றிமாறனால்  இரண்டாவது முறையாக என்னுடைய தயாரிப்பில் உருவான அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்டார்.

நடிகர் அமெரிக்காவில் இருப்பதால் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. எனவே மேடையில் இருந்தவர்களிடம் வீடியோகால் மூலம் பேசி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

விழாவில் பேசிய பலரும் சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடித்த கென் கருணாஸ்க்கு விருது கிடைக்கும் என்று தாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்ததாக குறிப்பிட்டனர்.

அப்போது பேசிய கென் கருணாஸ், இந்தப் படத்தில் தானும் ஒரு பாத்திரமாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு மிகுந்த நன்றிக் கடன்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஆரம்பத்தில் தன்னால் நடிக்க முடியுமா என்று தயங்கியபோது, தன்னைத் தட்டிக் கொடுத்து உன்னால் முடியும் என்று இயக்குநர் தன்னை நடிக்க வைத்ததாகவும் கென் கருணாஸ் கூறினார்.

கென் கருணாஸூக்குப் பின் வெற்றிமாறன் பேசும்போது , இந்தப் படம் உருவாக வேண்டும் என்று வெக்கை நாவலைப் படித்து முடித்த உடனேயே சிதம்பரம் கதாபாத்திரத்திற்கு யார் என யோசித்தபோது,முதலில் நினைவுக்கு வந்தது கென் தான். ஏற்கனவே இவரது வீடியோக்கள் சிலவற்றை கருணாஸ் என்னிடம் கொடுத்திருந்தார். அது ஞாபகத்துக்கு வந்ததால் உடனே முடிவு செய்து விட்டேன். ஆனால் சிவசாமி கதாபாத்திரத்தில் யாரை கொண்டுவருவது என்று மிகத் தீவிரமாக யோசித்து இரண்டு மூன்று நபர்களை தேர்வு செய்த பின்னர்தான் தனுஷ் என முடிவு செய்தேன். என் முதல் முடிவாக இருந்த கென் மிகச்சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று பாராட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே