இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000ஐ நெருங்கியது… மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பதிவு

நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாநிலங்களில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், நேற்று ஒரே நாளில், 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நடப்பாண்டில் உறுதி செய்யப்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுவாகும்.

சிகிச்சைக்குப் பிறகு 20,654 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 154 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.  நேற்றை காட்டிலும் கொரோனாவால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதனிடையே, மகாராஷ்டிராவில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு, நேற்று ஒரே நாளில் 25,833 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை அங்கு 1 லட்சத்து 66,000 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அடுத்த மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்கும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.

இதனிடையே, நாளை முதல் மகாராஷ்டிரா உடனான பேருந்து போக்குவரத்தை முற்றிலுமாக ரத்து செய்து, மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்குடன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மால்கள் மற்றும் திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதேபோன்று, சிக்கிம் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே