வைராக்கியத்தோடு போராடி வாழ்வில் வென்று காட்ட வேண்டுமே தவிர உயிரை விடுவது எதற்கும் தீர்வாக அமையாது – டிடிவி தினகரன்

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களைக் காப்பாற்ற அதிக எம்.பி-க்களை வைத்திருக்கும் திமுகவும், அதிகாரத்தில் உள்ள அதிமுக அரசும் உண்மையாக முயற்சிக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (செப். 10) தன் ட்விட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பெரும் துயரத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்துகிறது.

நீட் தேர்வு வருவதற்குக் காரணமாக இருந்த தீயசக்தியான திமுகவும், அதனைச் செயல்படுத்திய பழனிசாமி அரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவது போல நாடகம் ஆடுகிறார்களே தவிர நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க மறுப்பதால்தான் இந்த சோகம் தொடர்கிறது.

இனியாவது மக்களை ஏமாற்ற நினைப்பதைவிட்டு விட்டு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களைக் காப்பாற்ற அதிக எம்.பிகளை வைத்திருக்கும் தி.மு.கவும், அதிகாரத்தில் உள்ள பழனிசாமி அரசும் உண்மையாக முயற்சிக்க வேண்டும்.

அதே நேரத்தில், உயிரை விடுவது எதற்கும் தீர்வாக அமையாது;

எல்லாவற்றையும் எதிர்கொண்டு, வைராக்கியத்தோடு போராடி வாழ்வில் வென்று காட்ட வேண்டுமே தவிர உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்திற்கே மாணவர்கள் செல்லக்கூடாது என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே