தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி

அரியலூர் மாவட்டத்தில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 7 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், தமிழ்ச்செல்வி தம்பதி. இவர்களது மகன் விக்னேஷ். வயது 19.

சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017ல் பிளஸ்-2 முடித்தார்.

பொதுத்தேர்வில் 1,006 மதிப்பெண் எடுத்து இருந்தார். இதையடுத்து, டாக்டராக வேண்டும் என்ற கனவில் கேரளாவில் உள்ள பயிற்சி மையம் ஒன்று மற்றும் துறையூரில் ஒரு ‘நீட்’ மையத்திலும் பயிற்சி பெற்றார்.

இரண்டு முறை ‘நீட்’ தேர்வு எழுதி இருந்தார். ஒருமுறை தோல்வி அடைந்தார். மற்றொரு முறை வெற்றி பெற்றும் டாக்டர் சீட் கிடைக்கவில்லை.

3வது முறையாக வரும் 13ஆம் தேதி நடக்கும் நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வந்தார்.

இந்த நிலையில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த விக்னேஷ், நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் இருக்கும் கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

நீட் தேர்வு மன உளைச்சல் காரணமாக மாணவர் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

விக்னேஷின் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

இதையடுத்து, இன்று மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு நிதியுதவியாக ரூ. 7 லட்சம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் விக்னேஷின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிதி முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள வேண்டும். விடாமுயற்சி வெற்றி கொடுக்கும் என்று மாணவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இதே அரியலூர் மாட்டத்தில் இருக்கும் குளுமூரில் மாணவி அனிதா ‘நீட்’ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டார். தற்போது மாணவர் விக்னேஷின் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே