கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை தடுக்க முடியாமல் திமுக தற்போது தரைதட்டிய கப்பலாக உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும். அதிமுக அரசு செய்த திட்டங்களை முன்வைத்து தேர்தலில் மக்களை சந்திப்போம்.
மக்கள் அதிமுகவிற்கு ஹாட்ரிக் வெற்றியை தருவார்கள். திமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனையை எடுத்து சொல்லும் அளவிற்கு எந்த திட்டமும் இல்லை. திமுக ஆட்சி காலத்தில் நீடித்த மின்வெட்டு, துப்பாக்கி கலாச்சாரம், வெடிகுண்டு கலாச்சாரம் போன்றவற்றை இன்னும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
மதுரையில் 300 ஆண்டுகளாக செய்ய முடியாத வளர்ச்சி திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெயலலிதா இருந்தபோது அரசின் திட்டங்களை மக்களிடம் எளிமையாக கொண்டு செல்ல முடிந்தது. ஆனால் தற்போது சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல்வேறு சவால்கள் உள்ளது” எனக் கூறினார்.
தொடர்ந்து, பாஜகவின் வி.பி.துரைசாமி பாரதிய ஜனதா தலைமையில்தான் கூட்டணி எனக் கூறியது குறித்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதற்கு அவரவர் இருக்கும் கட்சியை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காக வி.பி. துரைசாமி அவ்வாறு சொல்லியிருக்கலாம்.
தேர்தல் வியூகம், கூட்டணி வியூகம் என்பதும் யார் தலைமையில் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் அதிமுக கட்சியின் தலைமை ஒன்று கூடி முடிவெடுக்கும். பொது வெளியில் விவாதிப்பது என்பது ஆக்கப்பூர்வமானதாக இருக்காது. கூட்டணி தொடர்வதாக பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் எல்.முருகன் தெளிவாக தெரிவித்துள்ளார்.
மக்களிடத்தில் அங்கீகாரம் பெற முடியாத கட்சியாக திமுக உள்ளது. திமுகவில் நிலையான கொள்கை இல்லாததால் திமுகவில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள். கட்சியிலிருந்து வெளியேறுபவர்களை தடுக்க முடியாமல் திமுக தற்போது கரைதட்டிய கப்பலாக திமுக உள்ளது” என்று தெரிவித்தார்.