சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு

கொரோனா பாதிப்பையடுத்து குறிபிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களை கண்டறிந்து தமிழகத்தில் தொழில் தொடங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசால் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களை ஈர்க்க தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

உலக பொருளாதாரத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தாக்கத்தால், குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து தொழில் நிறுவனங்கள்  இந்தியாவுக்கு இடம்பெயற முடிவு செய்துள்ளள.

அதன் அடிப்படையில் அந்நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அமைத்து உற்பத்தியை இந்தியாவில் தொடங்கவுள்ளன. 

குறிப்பாக ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, தைவான், ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சூழலில் அந்நிறுவனங்கள்  தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கவும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஈர்க்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்த சிறப்புக் குழு, இடம்பெயர வாய்ப்பு உள்ள நிறுவனங்களை கண்டறிந்து, அவற்றை தமிழகத்திற்கு வரவழைக்க தேவையான திட்டமிடலை மேற்கொள்ளும். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு அளிக்கப்பட்ட  சலுகைகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் அந்நிறுவனங்களுக்கு விளக்கும்  பணிகளை மேற்கொள்ளும்.

இது தொடர்பாக ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கையை முதல்வரிடம் வழங்கும். 

இந்த குழுவில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவன கூட்டமைப்பு, மற்றும் தொழில் நிறுவன பிரிதிநிதிகள் ஆகியோர் இடம் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே