மோசமான நிலையில் இந்திய பங்குச்சந்தை..!

கொரோனா தாக்கத்தின் காரணமாகச் சர்வதேச வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் உலகின் டாப் 10 பங்குச்சந்தை பட்டியலில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறிய நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகளவில் குறைந்தது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புச் சந்தைகள் மிகவும் மோசமான நிலையை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இருந்து இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படும் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு கடந்த 3 மாதத்தில் 27.31 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இந்தச் சரிவின் மூலம் இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு 2 டிரில்லியன் டாலர் அளவீட்டில் இருந்து குறைந்து டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறி 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 2020ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தை 2.16 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகள் பட்டியலில் 10வது இடத்தில் இருந்தது.

இதேபோல் ஜனவரி 2019இல் 2.08 டிரில்லியன் டாலர் மதிப்புடன் 7வது இடத்தில் இருந்தது.

ஆனால் இப்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு 1.57 டிரில்லியன் டாலர் மதிப்பிற்குக் குறைந்துள்ளது.

டாப் 10 பட்டியலில் இருந்து இந்திய பங்குச்சந்தை மார்ச் 23 அதாவது நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நாளில் அதிகப்படியாக 13.15 சதவீதம் வரையில் சரிந்தது.

இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் இது வரலாறு காணாத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்திய பங்குச்சந்தையின் மொத்த மதிப்பு வெறும் 1.31 டிரில்லியன் டாலர் மட்டுமே.

ஆசியாவில் மிகவும் மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள நாணயங்களில் இந்திய ரூபாய் முதன்மையாக உள்ளது.

2020ல் மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6.64 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

ஆனால் இதே காலகட்டத்தில் அமெரிக்க டாலர் 4.14 சதவீதம் உயர்ந்து சர்வதேச சந்தையில் தனது ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது.

2020ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.92 ரூபாய் என்ற மிகவும் மோசமான நிலையை அடைந்தது.

2020இல் மட்டும் சர்வதேச சந்தை மொத்தமாக 17.15 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இந்தச் சரிவின் மூலம் 86.99 டிரில்லியன் டாலராக இருந்த சர்வதேச சந்தை மதிப்புத் தற்போது 72.07 டிரில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.

சீனா இக்காலட்டத்தில் வெறும் 1.36 சதவீதம் வரையில் சரிந்து 7.24 டிரில்லியன் டாலராக உள்ளது, அமெரிக்கா 14.66 சதவீதம் சரிந்து 29.34 டில்லியன் டாலராக உள்ளது, பிரிட்டன் சந்தை 30.09 சதவீதம் சரிந்து 2.44 டிரில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே