ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருந்த “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருந்த ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 2ம் தேதி முதல் கொரோனா நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்குவதால் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று திருவாரூரில் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’கார்டு திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த திட்டம் முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்.

ஆனால் உலகையே தற்போது கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனாவால் வருவாய் இழந்தவோருக்கு வருகிற ஏப்ரல் 2ம் தேதி ரேஷன் கடைகளில் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

ஆதலால் , ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டத்தை செயல்படுத்த சிக்கல் எழுந்துள்ளது.

எனவே இந்த திட்டம் தற்காலிகமாக தமிழகத்தில் ஒத்திவைக்கப்படுவதாகவும் இந்த திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே