வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை; ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணை கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரும் இயற்கையாக உயிரிழக்கும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தானில் இருந்து பயிற்சிக்காக பெண் வங்கி ஊழியர் நள்ளிரவில் ரயிலில் கும்பகோணம் வந்திறங்கி, தாம் தங்க வேண்டிய விடுதிக்குச் செல்ல ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்தார்.

குருமூர்த்தி என்ற அந்த ஆட்டோ ஓட்டுநர் அவர் குறிப்பிட்ட விடுதி நோக்கிச் செல்லாமல் வேறு ஒரு பாதையில் செல்வதை கூகுள் மேப் மூலம் கண்டறிந்த இளம்பெண், ஆட்டோவில் இருந்து குதித்து தப்பினார்.

குருமூர்த்தி அங்கிருந்து சென்றுவிட, தனியே நின்ற இளம்பெண்ணை அவ்வழியாக கஞ்சா போதையில் வந்த தினேஷ், புருஷோத்தமன், அன்பரசன், வசந்த் ஆகியோர் பலவந்தமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்த போலீசார், குருமூர்த்தி உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.

கும்பகோணம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய தினேஷ், புருஷோத்தமன், அன்பரசன், வசந்த் ஆகிய 4 பேருக்கும் அவர்கள் இயற்கையாக மரணமடையும் வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளிகள் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டரை லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, தமிழக அரசு சார்பிலும் நிவாரணத் தொகை வழங்க அறிவுறுத்தினார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே