விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை விற்க அனுமதி..

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.

அவருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கில், விஜய் மல்லையா வாங்கிய கடனுக்காக வங்கிகளில் கொடுத்த உறுதிப்பத்திரத்தில் இணைக்கப்பட்ட சொத்துக்களை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்தச் சொத்துக்களை ஜனவரி 18-ம் தேதி வரை ஏலம் விட இடைக்கால தடை விதிப்பதாகவும், இந்த உத்தரவால் பாதிக்கப்படுவோர் நீதிமன்றத்தை நாட இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பறிமுதல் செய்த சொத்துக்களை வங்கிகள் ஏலம் விட ஆட்சேபனை இல்லை என்று கடந்த ஆண்டு நடந்த விசாரணையின் போது அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. 

மும்பையில் உள்ள கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம், தலைமறைவு நிதி மோசடியாளர் சட்டத்தின்கீழ், மல்லையாவை தலைமறைவு நிதி மோசடியாளராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி அறிவித்தது.

அதைத் தொடர்ந்து அந்தச் சட்டத்தின்கீழ் அவரது சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் அந்த நீதிமன்றம் தொடங்கியது.

இதையடுத்து, அந்தச் சட்டத்துக்கான அங்கீகாரத்தை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் மல்லையா மனுவொன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில்  மனுவொன்றை மல்லையா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி தாக்கல் செய்தார்.

அதில் தனது நிறுவனம் மற்றும் தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சொத்து முடக்க நடவடிக்கையின்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளைத் தவிர வேறு எந்த சொத்துகளையும் பறிமுதல் செய்யக் கூடாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே