JUST IN : வாக்குச்சீட்டு மடிப்பதில் குழப்பம் – வாக்குப்பதிவில் கால தாமதம் ஏற்பட்டது

இயந்திரம் பழுது, வாக்குச்சீட்டு மடிப்பதில் குழப்பம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் வாக்குப்பதிவில் தற்காலிக தடை ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் மூன்று மற்றும் நான்காவது வார்டுகளில் வாக்குச் சீட்டை அதிகாரிகள் தவறான முறையில் மாற்றி மடித்ததாகக் கூறி வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

காவல்துறையினர் உரிய விளக்கம் அளித்தபின் ஒரு மணி நேரம் கால தாமதத்துக்குப் பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

மதுரை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமோகூர் வாக்குச்சாவடி மையத்தில் முகவர் இல்லாததால் வேட்பாளர் ஒருவரே வாக்குப்பதிவு மையத்தில் அமர்ந்திருந்ததாகக் கூறி, மற்ற கட்சியினர், சுயேட்சைகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் காரணமாக அங்கு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

போலீசார் தலையிட்டு, குறிப்பிட்ட அந்த வேட்பாளரை மையத்திலிருந்து வெளியேற்றிய பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

அதே மையத்தில் கண் பார்வை குறைபாடு கொண்ட முதியவர் ஒருவருக்கு தேர்தல் அதிகாரி உதவச் சென்றதால், முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அரை மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு மையத்திலேயே காக்கவைக்கப்பட்ட முதியவர், அவருடைய வீட்டிலிருந்து உதவியாளர் ஒருவர் வந்தபின் வாக்களித்தார்.

கன்னியாகுமரி மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 5-வது வார்டில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

3 பதவிகளுக்கான வாக்குகள் அளித்துவிட்டு 4வது பதவிக்கு வாக்களிக்க முடியாததால் குழப்பம் ஏற்பட்டது. 

சில இடங்களில் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே