உள்ளாட்சி தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் மனுதாக்கல் செய்திருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது.

3 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்பட்டதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு மனு தாக்கல் செய்தனர்.

சேலம் மாவட்டம் முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டி கனகவல்லி வேட்புமனு தாக்கல் செய்தார்.

கடந்த 14-ம் தேதி வரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கடைசி நாளான நேற்று மட்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

இதன்மூலம் மொத்த வேட்புமனுக்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 ஆக உள்ளது.

அதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 657 மனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

  • கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 54 ஆயிரத்து 747 பேரும்,
  • ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32 ஆயிரத்து 939 பேரும்,
  • மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 ஆயிரத்து 992 பேரும் மனுதாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் வேட்புமனு மீதான பரிசீலனையை கண்காணித்தனர். அப்போது தகுதியான மனுக்கள் ஏற்கப்பட்டு ஆட்சேபத்துக்குரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை கடைசி நாளாகும். நாளை மாலை இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர்களுக்கு அன்றைய தினமே சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே