பள்ளி மாணவர்கள் இருவரின் வங்கிக் கணக்கில் 906.2 கோடி ரூபாய் தவறுதலாக வரவு..!!

பீகாரில், மாநில அரசு மாணவர்களுக்குத் தேவையான பேக் மற்றும் புத்தகங்கள், சீருடைகள் வாங்க சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்தி வருகிறது. 

பீகார் மாநிலத்தில் உள்ள கத்திகார் மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு மாணவர்கள் தங்களது வங்கிக்கணக்கிற்கு அரசு செலுத்திய பணம் வந்திருக்கிறதா என்பதைப் பார்க்க தங்களது பெற்றோருடன் அங்குள்ள இன்டர்நெட் சென்டருக்குச் சென்றனர்.

அவர்கள் வங்கிக்கணக்கை பார்த்தபோது இரண்டு பேருக்கும் மயக்கமே வந்துவிட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் ஆசிஸ் என்ற மாணவனின் வங்கிக்கணக்கில் 6.2 கோடியும், குருசரன் என்ற மற்றொரு மாணவனின் வங்கிக்கணக்கில் 900 கோடியும் வரவு வைக்கப்பட்டிருந்தது.

வங்கியில் குவிந்த மக்கள்

பீகார் கிராமின் வங்கி இந்தப் பணத்தை மாணவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தி இருந்தது. உடனே இதுகுறித்த செய்தி கிராமம் முழுக்க பரவியது. கிராம மக்கள் அனைவரும் தங்களது வங்கி பாஸ்புக்கை எடுத்துக்கொண்டு தங்களது வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டுள்ளதா என்று பார்க்க படையெடுத்தனர். ஒரே நேரத்தில் அதிகமானோர் வங்கிக்கு வந்து தங்களது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டபோதுதான் வங்கி அதிகாரிகளுக்கு விசயம் தெரிய வந்தது.

உடனே மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு 900 கோடி செலுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மனோஜ் குப்தா கூறுகையில்,“செய்தி கேள்விப்பட்டு காலையிலேயே வங்கியைத் திறந்து சரிபார்த்துக்கொண்டிருக்கிறோம். தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்தத் தவறு நடந்திருக்கிறது. தவறுதலாகப் பணம் சென்ற வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறோம் என்றார். மாவட்ட நீதிபதி உதயன் மிஸ்ரா இது குறித்து கூறுகையில், “மாணவர்களின் வங்கிக்கணக்கில் பணம் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் வங்கிக்கணக்கில் பணம் இல்லை. வங்கியிடமிருந்து இந்த தவறு குறித்து அறிக்கை கேட்டுள்ளேன்” என்றார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் இதே வங்கிதான் பீகாரை சேர்ந்த ஒருவரது வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.5.5 லட்சத்தை செலுத்திவிட்டது.

அந்த பணத்தை சம்பந்தப்பட்ட நபர் எடுத்து செலவு செய்துவிட்டார். வங்கி அதிகாரிகள் உண்மை நிலவரத்தை எடுத்து சொல்லி பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டதற்கு, பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக சொல்லியிருக்கிறார்.

அதில் முதல் தவணையை எனக்கு அனுப்பி இருக்கிறார். பணத்தை திரும்ப தர முடியாது என்று தெரிவித்துவிட்டார். அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே