சாத்தான்குளம் அருகே 8 வயது சிறுமி படுகொலை.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சாத்தான்குளம் அருகே  8 வயது சிறுமி கொலை வழக்கில், உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த வடலிவிளை இசக்கியம்மன் கோயில் அருகில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் தண்ணீர் பிடிக்கும் வெற்று டிரம்மில் 8 வயது  சிறுமி உடலில் காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

சாத்தான்குளம் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். சிறுமியின் வாய் மற்றும் உதடு ஆகிய பகுதிகளில் ரத்தம் உறைந்திருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அந்த சிறுமி, கல்விளை இந்திராநகரைச் சேர்ந்த சேகர் –  உச்சிமாகாளி தம்பதியின்  மகள் என்றும் 3ம் வகுப்பும் படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சேகர கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்.

இதனால் உச்சிமாகாளி கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை கவனித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் உச்சிமாகாளி கூலி  வேலைக்குச் சென்று விட்டார்.

காலை 10.30 மணிக்கு பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற சிறுமியை அதன் பின்பு காணவில்லை. இந்நிலையில் தான் அவர் பாலத்தின் அடியில் பிணமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சாத்தான்குளம் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது, இந்திரா நகரைச் சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (வயது 19). இவரது நண்பர் நித்தீஸ்வரன் (19). கல்லூரி மாணவரான இவர் நேற்று முத்தீஸ்வரன் வீட்டிற்கு வந்தார்.

அங்கு வைத்து 2 பேரும் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் அந்த வீட்டிற்கு 9 வயது சிறுமி டி.வி. பார்க்க வந்தாள். அப்போது அந்த சிறுமி பாலியல் பலாத்கார முயற்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும், வீட்டில் இருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சிறுமியின் உடலை தூக்கிப் போட்டு வெளியே கொண்டு சென்றனர்.

பின்னர் அங்குள்ள ஓடை பாலம் அருகே டிரம்மை வைத்து விட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தீஸ்வரன், நித்தீஸ்வரன் ஆகிய 2 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நிவாரணம் வழங்க வலியுறுத்தி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தும் வரை உடலை வாங்க மாட்டோம்  எனவும் உறவினர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே