74 வயதாகிறது.. தயவு செய்து என்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்.. ப. சிதம்பரம் கோரிக்கை

எனக்கு 74 வயதாகிறது, என்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள் என ப.சிதம்பரம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு செய்ததாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டப்பட்டார். பின்னர் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை கடந்த 30-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 30-ஆம் தேதி சிபிஐ காவல் முடிந்தவுடன் சிதம்பரம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ப.சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 5 நாட்கள் நீட்டிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் “சிபிஐ காவலுக்கு எதிராக நாங்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் செப்.2-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதனால் அதுவரை நான் சிபிஐ காவலிலேயே இருக்கிறேன்” என ப.சிதம்பரம் தரப்பு கூறியது. இதையேற்று அவர் செப்.2-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்றுடன் காவல் முடிவடைந்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தார். அப்போது அவர் அமலாக்கத் துறை முன்ஜாமீன் வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் தர வேண்டும்.

இல்லாவிட்டால் கடும் நிபந்தனைகளுடன் கூடிய வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என கபில் சிபல் வாதம் செய்தார். அப்போது ப. சிதம்பரமோ எனக்கு 74 வயதாகிறது. இந்த வழக்கை ஒத்திவைத்தால் நான் திகார் சிறைக்கு செல்ல நேரிடும்.

தயவு செய்து என்னை திகார் சிறைக்கு அனுப்பிடாதீர்கள் என சிதம்பரம் கேட்டார். அப்போது நீதிபதிகள், வரும் 5-ஆம் தேதி வரை ப. சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது. அவர் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்.

அவ்வாறு தாக்கல் செய்யும் மனுவை கீழமை நீதிமன்றங்கள் உடனடியாக விசாரிக்க வேண்டும். ஒரு வேளை ஜாமீன் கிடைக்காவிட்டால் செப்.5-ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே