பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக்கொலை..!!

விசாகப்பட்டினம் அருகே 67 வயது முதியவர் முதல் 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஜுட்டாடா கிராமத்தை சேர்ந்த 67 வயது முதியவர் ராமாராவ் என்பவர் நேற்றிரவு தன்னுடைய வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். ராமாராவ் வீட்டின் அருகே வசித்து வந்த அப்பல்ராவ் இன்று அதிகாலை ராமாராவ் வீட்டில் நுழைந்துள்ளான்.

பின்னர்,ராமராவ் அவருடைய மனைவி உஷா அதே குடும்பத்தை சேர்ந்த ரமாதேவி, அருணா, 2 வயது மகன் உதய், இரண்டு மாத குழந்தை ஊர்நிஷா ஆகிய 6 பேரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து தப்பி சென்று விட்டான்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

அதே பகுதியில், தலைமறைவாக இருந்த அப்பல்ராவை கைது செய்த போலீசார் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறு காரணமாக ராமராவுக்கும் அப்பலராவுக்கும் முன்பகை இருந்துள்ளது. கொலை நடப்பதற்கு முந்தைய நாள் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்தாகவும் பக்கத்து வீட்டார் கூறுகின்றனர்.

அதே போல , விசாகப்பட்டினத்தில் தீ பற்றிய வீட்டுக்குள் 4 பேர் இறந்து கிடந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாடாவில் ஆதித்யா பார்ச்சூன் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள 505 -ஆம் எண் அறையில் திடீரென்று தீ பிடித்தது.

போலீசாரும் தீயணைப்பு படையினரும் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது,வீட்டில் வசித்த பங்காருநாயுடு அவரின் மனைவி நிர்மலா மகன் தீபக் காஷ்யப் ஆகியோர் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தனர்.

விஜயநகர் மாவட்டத்தை சேர்ந்த பங்காருநாயுடு பஹ்ரைனில் வசித்து வந்தார்.

பின்னர், விசாகப்பட்டினம் திரும்பியவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆதித்யா பார்ச்சூன் டவர்ஸ் குடியிருப்பில் வாடகைக்கு குடியேறியுள்ளார். இந்நிலையில்தான் தீ விபத்து ஏற்பட்டு குடும்பமே அழிந்து போனது.

பங்காரு நாயுடு குடும்பத்தினரை யாராவது திட்டமிட்டு கொலை செய்து விபத்து போன்று சித்தரித்தார்களா அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு நான்கு பேரும் உயிரிழந்தனரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே