மும்பையில் செய்தியாளர்கள் 53 பேருக்கு கொரோனா

மும்பையில் 53 பத்திரிக்கையாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

சில முக்கியப் பணிகளுக்குச் செல்பவர்களுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் ஊடகத்துறையினர் கொரோனா தொடர்பான செய்திகளையும் அரசாங்கம் கூறும் அறிவிப்புகளையும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்று செய்தியாளர்களும் இந்த ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கான செய்திகளையும் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

ஏப்ரல் 16 மற்றும் 17-ம் தேதிகளில் மும்பையில் உள்ள ஊடகத்துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் என 171 நபர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 53 நபர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று உறுதியானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே