50வது ஆண்டில் பாண்டியன் விரைவுரயில்..!

மதுரையில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் பயணிகளை ஏற்றிக் கொண்டு பல்வேறு நினைவுகளை சுமந்தபடி இயங்கி வரும் பாண்டியன் விரைவு ரயில் தனது ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவினை கோலாகலமாக கொண்டாடியது. 

50 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போது இருப்பது போல் போக்குவரத்து வசதிகள் கிடையாது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற நகரங்களில் இருந்து சென்னை வருவது என்றால் அது குதிரைக் கொம்பாக இருந்தது.

இந்த சமயத்தில் தான் கடந்த 1969ம் ஆண்டு மதுரையில் இருந்து சென்னையில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.

முதலில் 18 பெட்டிகளுடன் பகலில் இயங்கிய அந்த ரயில் தான் அந்த காலகட்டத்தல் மிகப்பெரியது. அப்போது எல்லாம் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை வர வேண்டும் என்றால் மதுரை வந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலமாகத்தான் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இதனால் தென்மாவட்டங்களில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மிகவும் பிரபலம்.

தற்போது சென்னை – தென்மாவட்டங்கள் இடையே கணிசமாக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தெற்கு ரயில்வேயில் மதுரை – சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு தனி அடையாளமாகவே திகழ்ந்து வருகிறது.

சாதாரண மக்கள் தொடங்கி மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் வரை பலரும் இந்த ரயிலில் பயணித்துள்ளனர்.

தற்போது மதுரையில் இருந்து இரவில் புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலையில் சென்னைக்கு வந்தடைகிறது. பேருந்தை விட குறைந்த கட்டணம் என்பதாலும் வசதிகள் இருப்பதாலும் ஏழை எளிய மக்கள் அதிகமானோர் இந்த ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

இந்நிலையில் பாண்டியன் விரைவு ரயில் இயக்கப்பட்டு 50வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை ஒட்டி இந்த ரயில் சம்பந்தமாக மாணவ-மாணவிகள் மற்றும் ரயிலில் பயணிப்போருக்கு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் பாண்டியன் விரைவு ரயில் போன்று மிகப்பெரிய அளவிலான கேக் ஒன்றையும் தயார் செய்து அதை ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே