லாட்டரி சீட்டால் விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை (வீடியோ இணைப்பு)

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரிச் சீட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக தொழிலாளி ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

லாட்டரிச் சீட்டை ஒழித்து மற்றவர்களைக் காப்பாற்றுங்கள் என்று உருக்கமாக வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள சித்தேரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி அருண். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், பிரியதர்ஷினி, யுபஸ்ரீ, பாரதி என ஐந்து முதல் ஒரு வயது வரை 3 பெண் குழந்தைகளும் இருந்தனர்.

சொந்த வீடு, நிம்மதியான வாழ்க்கை என இருந்த அருண், நகைத் தொழில் நலிவடைந்ததால் மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டுகளை வாங்க ஆரம்பித்துள்ளார்.

100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படும் 3 எண்கள் மட்டுமே கொண்ட இந்த லாட்டரிச் சீட்டுகளில் பல லட்ச ரூபாய் பரிசு விழும் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

அதனை நம்பி லாட்டரிச் சீட்டுகளை வாங்கி கடனாளியான அருண் நேற்றிரவு தனது 3 குழந்தைகளுக்கும் நகை செய்ய பயன்படுத்தும் சயனைடு விஷத்தை கொடுத்து கொன்றிருக்கிறார்.

5 members of a single family commit suicide in Villupuram by lottery ticket

அதன்பின் பதிவு செய்த வீடியோவில் தானும், மனைவியும் தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.

விஷம் சாப்பிடும் முன்பாக தான் பதிவு செய்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார் அருண்.

அதைப் பார்த்து பதறிப்போன நண்பர்கள் அருணின் வீட்டைத் தேடி ஓடோடி வந்துள்ளனர்.

பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது அங்கே அருணும், அவரது மனைவியும், 3 குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் 5 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நகைத் தொழில் நலிவு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் லாட்டரிச் சீட்டிற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுகிறார்கள்.

3 நம்பர் லாட்டரிச் சீட்டால் ஒரு குடும்பமே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே