5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – மு.க ஸ்டாலின்

பள்ளிக்குள் நுழைவதிலிருந்து கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளியேறும் வரை, விதவிதமான பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எப்போதுமே 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறிவந்த நிலையில், திடீரென மத்திய அரசின் முடிவுப்படி பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படும் முன்பே தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு கால்கோள்விழா நடத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் மூலம் ஆரம்பப் பள்ளி தேர்வுகளை எழுதவும் கோச்சிங் சென்டர்கள் என்ற தாழ்நிலையை உருவாக்கி ஆரம்பக் கல்வியையும் வணிகமயமாக்கி விடும் பேராபத்து ஏற்படும் என்றும் ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வியறிவை எட்டாக் கனியாக்கி விடும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது, மாணவர்களை ஃபெயில் ஆக்கி – ஆரம்பக் கல்வியை முடிக்கவே பல ஆண்டுகள் ஆகும் சூழ்நிலையை ஏற்படுத்துவதன் மூலம் படிப்பதையே வெறுத்து குலக் கல்விக்குத் திருப்பி அனுப்பும் தந்திரம் என்றும், அனைவருக்கும் கல்வி என்ற முற்போக்கு எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

ஏற்கனவே 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு உள்ள நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு, மாணவர்களுக்கு மனஅழுத்தம், விரக்தியை ஏற்படுத்தி உடல் நலத்தை கெடுக்கும் என்றும் சமூகநீதியின் வேரில் வெந்நீர் ஊற்றி, சமுதாய முன்னேற்றத்தை ஒரு நூறாண்டு பின்னோக்கி இழுத்துச் செல்லும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே