45 நாட்களுக்கு சாலை வரி ரத்து..? தமிழக அரசை வலியுறுத்தும் லாரி உரிமையாளர்கள்..!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் 45 நாட்களுக்கும் மேலாக லாரிகளை இயக்க முடியாத சூழல் நிலவியதால் 45 நாட்களுக்கான சாலை வரியை ரத்து செய்யக்கோரி லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியை முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24’ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. பின்னர் ஏப்ரல் 21 அன்று தமிழக அரசு சில தளர்வுகளை அளித்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களை இயக்க அனுமதித்தது.

எனினும் ஓட்டுநர் பிரச்சினை, சரக்கு ஏற்றி இறக்கும் ஊழியர்கள் பிரச்சினை காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 90% லாரிகள் 45 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படவில்லை. 

எனினும் ஏப்ரல், மையம் ஜூன் மாதங்களுக்கான சாலை வரியை ஜூன் 30’க்குள் செலுத்திட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் ஜூன் 30’க்குள் வரியை செலுத்தாவிட்டால், 100% அபராதமும், மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கான வரியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என உத்தரவு போட்டிருந்தது.

இந்நிலையில் சாலை வரிக்கான அபராதத் தொகையையும், சாலை வரியை செலுத்த செப்டம்பர் 30 வரை காலக்கெடுவை நீட்டித்தும் உத்தரவிட லாரி உரிமையாளர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே சாலை வரி செலுத்தும் ஆன்லைன் பரிவாகன் இணைய பக்கத்தில், தமிழக பதிவு எண்ணைக் கொண்ட வாகனங்களுக்கு வரி செலுத்துவதற்கான இணைப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் மற்ற மாநில வாக பதிவு எண்களைக் கொண்ட வாகனகளுக்கு இணைப்பு செயல்படுகிறது.

இதனால் தற்போது வரி செலுத்த முடியாமலும் லாரி உரிமையாளர்கள் தவிக்கின்றனர். மேலும் வரி செலுத்தாமல் லாரிகளை இயக்க முடியாத சூழல் உள்ளது. 

இது குறித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர் கணேஷ்குமார், “கொரோனா அச்சம் காரணமாக கிராமங்களில் ஓட்டுனர்கள் வேலைக்கு வரவில்லை. லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு செல்லும் ஓட்டுனர்கள் மீண்டும் ஊருக்குள் நுழையக்கூடாது எனும் ஊர்க்கட்டுப்பாடு காரணமாக, பலர் பணிக்கு வர தயங்குகின்றனர். அவர்கள் வந்தாலும் சரக்குகளை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் கொரோனா அச்சத்தால் பணிக்கு வருவதில்லை. இதனால் சரக்குகளை ஏற்றி இறக்குவதில் சிரமம் உள்ளது.

இது போன்ற பிரச்சினைகளால் எங்களால் 45 நாட்கள் லாரிகளை இயக்க முடியவில்லை. ஜூன் மாதத்தில் தான் லாரிகளை இயக்க முடிந்தது. எனவே 45 நாட்களுக்கான சாலை வரியையும், அதற்கான அபராதத்தையும் ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக அரசு எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்கும் என நம்புகிறோம்.” என கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே