நாளை வெளியாகவுள்ள 3 முக்கிய தீர்ப்புகள்..!

அயோத்தி வழக்குக்கு அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் சபரிமலை வழக்கு மற்றும் ரஃபேல் போர் விமான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.

இதுபோல் காவலாளியே திருடன் என ராகுல் காந்தி விமர்சித்த வழக்கிலும் நாளை தீ்ர்ப்பு வெளியாகவுள்ளது.

அயோத்தி வழக்குக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனத்தை ஈர்க்கும் வழக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கு அமைந்துள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆகஸ்டில் தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து கேரள அரசும் பெண் பக்தர்களை அனுமதித்தபோது பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதனால் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சில நாட்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு இல்லை என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியதை எதிர்த்தும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த வழக்கிலும் விசாரணை முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தீர்ப்பும் நாளை வெளியாகிறது.

இதுபோல் “காவலாளியே திருடன்” என பிரதமரை ராகுல் விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

மொத்தத்தில் மூன்று முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே