விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் நேற்று மாலை ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து என்பது முடியாத சோகமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த வெடி விபத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

அந்த துயரம் மறைவதற்குள் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.

குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் தீக்குச்சி மத்தாப்பு தயாரிக்கும் ஆலையில் நேற்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

நால்வரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

பெண்ணுக்கு 30% தீக்காயம் ஏற்பட்ட நிலையில், ஆண்கள் மூவரும் 90% தீக்காயத்தால் பாதிக்ப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பெற்று வந்த நால்வரில் புதிய ராஜா என்பவர் உயிரிழந்தார்.

மற்ற மூவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நடராஜன், வீராச்சாமி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

பஞ்சவர்ணம் என்ற பெண் தொழிலாளி 30% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் விசாகன், ஆலை போர்மேன் துரைராஜ் ஆகிய இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

கவனக்குறைவாக செயல்பட்டு விபத்து ஏற்படுத்தியது, உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில் ஆலை போர்மேன் துரைராஜ் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள விசாகனை போலீசார் தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே