கைலாசாவுக்கு வர விரும்புவோருக்கு 3 நாட்கள் இலவச விசா..!!

சர்ச்சை சாமியார் நித்யானந்தா தான் நிறுவியுள்ள கைலாசா நாட்டுக்கு வர விரும்புபவர்களுக்கு 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும் என்றும்; ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவசமாக விமானம் இயக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்யானந்தா மீது ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு வழக்குகளில் போலீஸார் தேடுவதால் அவர் தலைமறைவாக இருந்துவருகிறார்.

சர்ச்சை சாமியார் நித்யானந்தா தான் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார்.

அதோடு கைலாசா நாட்டுக்கு என தனி சட்டம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார்.

நித்யானந்தா உருவாக்கியுள்ள கைலாசா நாடு ஈக்குவடார் நாட்டின் ஒரு தீவு என்றும் கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.

சில மாதங்களுக்கு முன்பு, நித்யானந்தா கைலாசாவுக்கு என தனி கரன்சியாக தங்க நாணயங்களை வெளியிட்டார்.

அதோடு, கைலாசாவுக்கு வருவதற்கு விரைவில் பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் அறிவித்தார்.

நித்யானந்தா தன்னுடைய எல்லா அறிவிப்புகளையும் வீடியோ மூலம்தான் அறிவித்து வருகிறார்.

ஆனால், காவல்துறையினர் அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கைலாசாவுக்கு வர விரும்புபவர்களுக்காக விசா மற்றும் எப்படி பயணம் செய்வது என்பது குறித்து நித்யானந்தா பேசும் புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் நித்யானந்தா, கைலாசா நாட்டிற்கு வர விரும்பவர்கள் மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும்; அவர்களுக்கு இலவசமாக 3 நாள் விசா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் அங்கிருந்து தனி விமானம் மூலம் இலவசமாக கைலாசாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து வீடியோவில் நித்யானந்தா கூறியிருப்பதாவது, ‘கைலாசா நாட்டுக்கு வர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம்.

கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும். ஆனால், 3 நாட்களுக்குமேல் விசா கிடையாது.

ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை வழங்கப்படும் என்பதால் கைலாசாவுக்கு வருகை தர விரும்புகிறவர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும்.

ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவார்கள்.

அவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும்.

கைலாசா வருகை தர விரும்பும் நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது. அவர்களுக்கு இந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் என்னுடன் சேர்ந்து இறைவனை வழிபட வாய்ப்பு கிடைக்கும்.’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே