கர்ணன் படத்துக்கு தடை கோரி 2- வது வழக்கு: நடிகர் தனுஷூக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கர்ணன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘பண்டாரத்தி’ பாடலை நீக்கவும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரியும் தாக்கலான மனு தொடர்பாக நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த ராஜாபிரபு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் டீசர் மற்றும் அந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலும் சினிமா தணிக்கை வாரியத்தின் அனுமதியுடன் ஜனவரி 19-ல் வெளியிடப்பட்டது. பின்னர், இதே படத்தில் இடம் பெற்றுள்ள ‘பண்டாரத்தி’ எனும் பாடல் தணிக்கை வாரியம் அனுமதியில்லாமல் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலில் ‘பண்டாரத்தி என் சக்காளத்தி’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தப்பாடல் மிகவும் பின்தங்கிய பட்டியலில் உள்ள ஆண்டி பண்டாரம் சமூக பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, கர்ணன் படத்திலிருந்து பண்டாரத்தி பாடலை நீக்கவும், அதுவரை கர்ணன் படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக நடிகர் தனுஷ், பாடலாசிரியர், பாடலைப்பாடிய தேவா, இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, சினிமா தணிக்கை வாரிய மண்டல அலுவலர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஏப். 24-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஏற்கெனவே, கர்ணன் படத்துக்கு தடை கோரி மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த புல்லட் பிரபு, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பண்டாரத்தி என் சக்காளத்தி என்ற வார்த்தை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் பண்டாரம் , ஆண்டிப்பண்டாரம், ஜங்கம் , யோகிஸ்வரர் ஆகிய சமுதாயத்தை பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைத்துள்ளதால் அந்த வரிகளை நீக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனு தொடர்பாக சினிமா தணிக்கை வாரிய அலுவலர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே