கொரோனா தடுப்பூசி கோரி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் விண்ணப்பம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாவது கட்டம் நேற்று தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரே நாளில் 29 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 11.4 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 1.11 கோடியை கடந்துள்ளது. இதுவரை 1.7 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 1.57 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இரண்டு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியது.

முதல் கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு, அதன் பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இரண்டாம் கட்டமாக மத்திய அரசு நேற்று முன்னெடுத்தது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் பெற்றுக்கொண்டும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

நாடு முழுவதும் 10,000 அரசு மையங்களிலும், 20,000 தனியார் மையங்களிலும் தடுப்பூசி போடப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நேற்று காலை 9 மணி தொடங்கி இரவு 8:30 வரை ஆரோக்கிய சேது செயலி மற்றும் இணைய வாயிலாக 29 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நபர் ஒருவர் தங்கள் குடும்பத்தினருக்கும் சேர்த்து விண்ணப்பித்திருப்பார். ஆகவே இதன் மொத்த எண்ணிக்கை 1 கோடியை கடந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த எண்ணிக்கைக்கும் உருமாறிய கொரோனா தொற்று பரவல் குறித்த அச்சத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும், தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு, புதிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமல்ல என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இப்பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாவது கட்டம் தொடங்கியிருக்கக்கூடிய நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்ககத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,300 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே