டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை கைது செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் – 4; குரூப் – 2ஏ; வி.ஏ.ஓ., தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த முறைகேட்டுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்த, சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, இடைத்தரகர் ஜெயகுமார் உள்ளிட்ட, 51 பேரை, ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக, தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டு இருந்தது.தற்போது, விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, சென்னை எழும்பூரில் உள்ள, மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., – ஐ.ஜி., சங்கர் தலைமையிலான போலீசார், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் 20 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. முறைகேடு தொடர்பாக மேலும் 40 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே