+2 மாணவியை பாலியல் வன்கொடுமை – ஆட்டோ ஓட்டுனருக்கு 27 வருடம் சிறை

சேலத்தில் +2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுனருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் பட்டைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம், ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்று பள்ளியில் விடும் தொழில் செய்து வந்தார்.

அப்போது அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது +2 மாணவியுடன் இப்ராஹிமிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் அம்மாபேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போச்சோ சட்டத்தில் இப்ராஹிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

இதனை அடுத்து இந்த வழக்கு சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம் குற்றம் சாட்டப்பட்ட இப்ராஹிமிற்கு 27 வருட சிறை தண்டனையும், 80,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே