2 ஆண்டுகளுக்குப்பிறகு பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைப்பு..!!

லோக்சபா தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாயை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைப்பது வழக்கம்..

ஆனால் சுமார் 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் முன்பு சரிந்த காரணத்தால், விலை ஏற்றப்படவில்லை.. அதேநேரம் விலையும் குறைக்கப்படவில்லை..

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்து நேற்று அறிவித்தது.. அதன்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் (எக்ஸ்) வெளியிட்டு இருந்தார்.

இதனிடையே இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஒரு மாதமாக நிலவி வந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலை தற்போது 2 ரூபாய் குறைந்திருக்கிறது.

டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.72 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது இன்று முதல் ரூ.94.72 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதைப்போல டீசல் விலை டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.89.62-ல் இருந்து ரூ.87.62 ஆக இன்று குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.73 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.100.73 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதைப்போல டீசல் விலை சென்னையில் ரூ.94.33-ல் இருந்த நிலையில், இன்று ரூ.92.33 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு பொதுமக்களை மகிழ்ச்சியில ஆழ்த்தி உள்ளது. இதுபற்றி பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பால் பணப்புழக்கம் அதிகரிக்கும், நுகர்வோரின் செலவினங்களும் அதிகரிக்கும் .

இதைப்போல டீசலில் இயங்கும் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்களின் இயக்க செலவுகள் குறையும் . இந்த விலை குறைப்பு காரணமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், சுற்றுலா மற்றும் பயணத்தையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே