முழு அலசல்: 8 மாநிலங்களில் 19 இடங்களுக்கு இன்று மாநிலங்களவை எம்.பி. தேர்தல்

8 மாநிலங்களில் 19 இடங்களுக்கான மாநிலங்களவை எம்.பி.த் தேர்தல் இன்று நடைபெறுகிறது. குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கு மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் 55 இடங்களில் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 36 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 19 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட இருந்தது. இவர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிந்ததால், அதற்குள் தேர்தலை நடத்த வேண்டியிருந்தது.

எத்தனை இடங்களுக்கு தேர்தல்

ஆனால் கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்து இன்று 8 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி ஆந்திரா, குஜராத்தில் தலா 4 இடங்கள், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் தலா 3 இடங்கள், ஜார்கண்டில் 2 இடங்கள், மணிப்பூர், மிசோரம், மேகாலயா ஆகியமாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

இன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம்

கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு எம்எல்ஏக்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. முக்கவசம் அணிந்து வருதல், சமூக விலகலைக் கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி மருந்துகளும் அளிக்கப்பட உள்ளன. எம்எல்ஏக்களுக்கு காய்ச்சல் ஏதும் இருந்தால் அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு எம்எல்ஏவும் தெர்மல் ஸ்கீரினிங் முடிந்தபின்பே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

கர்நாடகத்தில் சுமூகம்

இதில் கர்நாடக மாநிலத்தில் 4 இடங்களுக்கான தேர்தலில் 4 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு பெற்றனர். முன்னாள் பிரதமர் ஹெச்டி தேவேகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக சார்பில் இரண்ணா கடாடி, அசோக் கஸ்தி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.அதேபோல அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட நபம் ரபியா போட்டியின்றி தேர்வாகினார்.

மணிப்பூரில் பாஜகவுக்கு சிக்கல்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஒரு இடத்துக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், நேற்று முன்தினம் வரைஆட்சியில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த என்பிபி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர், பாஜகவிலிருந்து 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான இபோபி சிங் ஆட்சி அமைக்கஉரிமையும் கோரியுள்ளார்

இதனால் முதல்வர் பிரேன் சிங் அரசுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் 9 பேர் திடீரென விலகியுள்ளதால், இன்று நடைபெறும் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லீசெம்பா சனஜோபா வெற்றிபெறுவாரா என்பது சந்தேகமே.

சனஜோபா மணிப்பூர் மாநிலத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் சார்பில் டி மாங்கி பாபு போட்டியிடுகிறார். இந்த மாநிலத்தில் எந்த கட்சியின் வேட்பாளர் வெல்வார்கள் என்பது இன்று மாலை தெரியவரும் அதுவரை சுவாராஸ்யமாகத்தான் இருக்கும்.

பரபரப்பை ஏற்படுத்தும் மாநிலங்கள்

இன்று நடைபெறும் தேர்தலில் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்கள்தான் அனைவரையும் உற்று நோக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த 3 மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதும், ராஜினாமா செய்வதும், கட்சி மாறுவதும் போன்ற அரசியல் விளையாட்டுகள் நடந்து வந்தன

இதனால் இந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து பாதுகாத்தன.

குஜராத் யாருக்கு வெற்றி

இதில் குஜராத் மாநிலத்தில் 4 இடங்களுக்கான தேர்தல் நடக்கிறது. இதில் 3 இடங்களைக் கைப்பற்ற பாஜக போட்டியிடுகிறது. ஆனால், பாஜவின் எம்எல்ஏக்கள் அடிப்படையில் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றாலும் 3 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. பாஜக சார்பில் அபய் பரத்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

காங்கிரஸ் கட்சிக்கு இரு இடங்கள் கிடைக்கும், அந்த கட்சி சார்பில் சக்திசிங் கோகில், பரத்சிங் சோலங்கி ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் எம்எல்ஏக்கள் அடிப்படையில் ஒருவர் வெற்றி பெற வாய்ப்பு உண்டு,

ஆனால் இருவரும் வெல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது காங்கிரஸ். இரு கட்சிகளுமே தாங்கள் களமிறக்கிய வேட்பாளர்கள் வெல்வார்கள் என்று நம்பிக்கையோடு இருப்பதால், 4 இடங்களுக்கு 5 பேர் போட்டி சுவாரஸ்யத்தை அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தற்போது 172 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், 10 இடங்கள் காலியாக இருக்கின்றன. (8 பேர் ராஜினாமா, இருவர் வழக்கால் வாக்களிக்க முடியாது) ஒரு எம்பி. பதவிக்கு 35 எம்எல்ஏக்கள் வாக்கு தேவை. காங்கிரஸ் கட்சி்கு 65 எம்எல்ஏக்கள், ஒரு சுயேட்சை எம்எல்ஏ இருக்கிறார்கள், இன்னும் 4 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் இரு வேட்பாளர்களும் வெல்ல முடியும்.

பாஜகவுக்கு 103 எம்எல்ஏக்கள் தற்போது அவையில் இருக்கிறார்கள். 105 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் 3 வேட்பாளர்களும் வெல்ல முடியும். இன்னும் இரு எம்எல்ஏக்கள் வாக்கு தேவை. இதில் 4-வது இடத்தை முடிவு செய்ய பாரதிய பழங்குடி கட்சி எம்எல்ஏ, என்சிபி எம்எல்ஏக்கள் கையில்தான் இருக்கிறது

மத்தியப்பிரதேசம்

இதேபோல மத்தியப்பிரதேசத்திலும் காங்கிரஸ், பாஜக இரு எம்எல்ஏக்களை களத்தில் இறக்கியுள்ளனர். பாஜக சார்பில் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, சுமர் சிங் சோலங்கி இருவரும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் திக்விஜய் சிங், பூல் சிங் பரியா இருவரும் போட்டியிடுகின்றனர். 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

230 பேர் கொண்ட சட்டப்பேரவையில் தற்போது பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் இரு எம்எல்ஏக்கள், சமாஜ்வாதிக் கட்சியின் ஒருஎம்எல்ஏ, இரு சுயேட்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 92 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து 22எம்எல்ஏக்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தது உள்பட 24 இடங்கள் காலியாக உள்ளன. ஆதலால், மத்தியப்பிரதேசத்தில் பாஜகவுக்கு இரு இடங்கள் கிடைப்பதில் பிரச்சினை இருக்காது, ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இரு இடங்கள் கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறி. 4-வது இடத்துக்கு கடும் போட்டி நிலவும்.

ராஜஸ்தானில் பாஜக வெல்லுமா

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி தங்கள் எம்எல்ஏக்களை தக்கவைக்க போராடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தங்களின் எம்எல்ஏக்கள் அனைவரையும் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து பாதுகாத்து வந்தது. 3 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் கே.சி வேணுகோபால், நீரஜ் தங்கி, பாஜக சார்பில் ராஜேந்திர கெலாட், ஓங்கர் சிங் லகாவத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 200 இடங்கள் கொண்ட பேரவையில் 107 எம்எல்ஏக்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. இதில் சுயேட்சை எம்எல்ஏ, ராஷ்ட்ரிய லோக் தளம், பாரதிய பழங்குடி கட்சி ஆதரவும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது

ஆளும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களை வெல்ல சாத்தியம் இருக்கிறது, ஆனால் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் உள்ளனர், இதில் ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆகியவற்றைச் சேர்த்தால் ஒரு இடம் வெல்லலாம். ஆனால், இரு வேட்பாளர்களை பாஜக களமிறக்கியுள்ளது

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் வெற்றி உறுதி

ஆந்திரா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு பிரிக்கப்பட்டபின் முதல் முறையாக அங்கு மாநிலங்களவைத் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சி 4 இடங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு எம்.பி.க்கு 36 எம்எல்ஏக்கள் வாக்குத் தேவை.

அந்த அடிப்படையில் 175 உறுப்பினர்கள் கொண்ட பேரைவயில் ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சி 4 இடங்களையும் வெல்லக்கூடும். தெலுங்குதேசம் கட்சிக்கு 20 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் வெல்வதற்கு எந்த சாத்தியமும் இல்லை.

ஜார்க்கண்டில் பாஜக நிலை பரிதாபம்

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபு சோரன், காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜடா அன்வர், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் தீபக் பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 2 இடங்களுக்கு 3 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதேபோல மேகாலயாவில் மேகலாயா ஜனநாயகக் கூட்டணி சார்பில் கார்லுகியும், காங்கிரஸ் சார்பி்ல் கென்னடி கைரிம் போட்டியிடுகின்றனர். ஒரு இடத்துக்கு இரு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே