தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பால், காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் இன்று மாலை 6 மணி முதல் மூடப்படுகின்றன.
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கொரேனா வைரசால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், அனைத்து மாவட்ட எல்லைகளை மூடும் உத்தரவு செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றார்.
144 தடை உத்தரவின்படி அத்தியாவசிய, அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி ஆகியவை இயங்காது. பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தவிர மற்ற அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் மூடப்படும்.
அத்தியாவசிய பணிகள் மற்றும் அவசர அலுவல்கள் பணிகளை தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.
காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய அத்தியாவசியத் துறைகள் தொடர்ந்து செயல்படும்.
அத்தியாவசியப் பணிகளையும், மருத்துவம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.
தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரிய வேண்டும்.
அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.
அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர, பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது.
வீடுகளை தவிர விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, பிற இடங்களுக்கு சென்று வந்தவர்கள் கொரோனா அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தடை உத்தரவால் கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகள் களைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
கொரோனாவை தடுக்க அரசு எடுத்து வரும் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.