கேரள மக்களுக்கு “ஓணம் பரிசாக” 100 நாட்களில் 100 நலத்திட்டங்கள் – பினராயி விஜயன்

கேரள மக்களுக்கு ஓணம் பரிசாக 100 நாட்களில் 100 திட்டங்கள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

எனினும், கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மக்கள் ஊரடங்கு விதிகளை மீறாமல் இருக்கும்படி அரசு வலியுறுத்தி உள்ளது.

இதனால், மக்கள் வழக்கமான கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவின் பொருளாதார நிலையை ஊக்குவிக்கும் வகையில், மாநிலத்தில் 100 திட்டங்கள் அடுத்த 100 நாட்களில் நிறைவேற்றி முடிக்கப்படும் என தெரிவித்தார். 

இது, கேரள மக்களுக்கு அரசு அளிக்கும் ஓணம் பரிசு என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் இன்று முதல் தினமும் 60 திருமணங்களும், செப்டம்பர் 10-ம் தேதி முதல் 1000 பேர் தரிசனம் செய்யவும் அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக அங்கீகரிக்கப்பட்ட முறைப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

* சமூக நல ஓய்வூதியம் ரூ.100 அதிகரிக்கப்படும்.

ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் விநியோகிக்கப்படும்.

* அடுத்த 100 நாட்களுக்குள் சுகாதாத்துறையில் போதுமான அளவிலான ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

* நாள்தோறும் 50 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும்.

* ஆரம்ப சுகாதார மையங்கள் மருத்துவமனையின் வசதிகளுடன் குடும்ப சுகாதார மையங்களாக மாற்றப்படும்.

* 100 நாட்களுக்குள் 153 புதிய குடும்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்படும்.

* அரசு பள்ளிகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். புதிய கட்டடங்கள் கட்டப்படும். 250 பள்ளி கட்டடத்தின் கட்டுமானம் விரைவில் தொடங்கும். பள்ளிகள் ஹைடெக்காக மாற்றப்படும்.

* 5 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட வித்யா ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படும்.

* கல்லூரிகளில் 150 புதிய படிப்புகள் தொடங்கப்படும். கல்லூரி மற்றும் உயர்நிலை துறைகளில் 1000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* வேளாண்மை அல்லாத துறையில் 15,000 புதிய நிறுவனங்கள் மூலம் 50,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். 5,000 கிராமப்புற சாலைகள் புதுப்பிக்கப்படும்.

* போக்குவரத்துக்காக 189 சாலைகள், 21 பாலங்கள் மற்றும் 41 புதிய திட்டங்கள் நவம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்.

* சபரிமலையில் ரூ.23 கோடி மதிப்புள்ள 3 திட்டங்கள் துவங்கப்படும். 1.5 லட்சம் புதிய நீர் இணைப்பு, 15 புதிய காவல் நிலையங்கள் மற்றும் 15 சைபர் ஸ்டேஷன்கள் துவங்கப்படும்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே