மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.

ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

பண்டாரா அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்து புகை வெளியே வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணியில் இருந்த செவிலியர் ஒருவர், உடனடியாக அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்தது விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்களின் மீட்பு நடவடிக்கையால் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் இருந்த வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த 17 குழந்தைகளில் 7 குழந்தைகளை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது.

மற்ற 10 குழந்தைகளை மீட்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து குழந்தைகளும் ஒரு மாதம் முதல் மூன்று மாதங்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்று ஒரு மருத்துவர் கூறினார்.

நான்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புதிதாக பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே