விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணிக்கு எதிராக காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு

விளவங்காடு சிட்டிங் எம்.எல்.ஏ விஜயதாரணி மற்றும் குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் இருவருக்கும் மீண்டும் சீட் கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு அதிகரித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணிக்கு எதிராக காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சாமுவேல் ஜார்ஜ் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு முன்னரே பணம் பெற்று கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் எம்.பி ஜோதிமணியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதனால் காங்கிரஸில் உட்கட்சி பூசல் அதிகரிக்க தொடங்கியது.

இந்த விவகாரத்தில் குறிப்பாக விளவங்காடு சிட்டிங் எம்.எல்.ஏ விஜயதாரணி மற்றும் குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் இருவருக்கும் மீண்டும் சீட் கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு அதிகரித்தது. ஆனால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மீண்டும் விஜயதாரணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணிக்கு எதிராக காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சாமுவேல் ஜார்ஜ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக காங்கிரஸ் கமிட்டி ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் இல்லை.

கே எஸ் அழகிரி,வேணு கோபால் ,மணி சங்கர் அய்யர் ஆகியோர் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு பாஜக விற்கு விசுவாசமாக உள்ளனர். காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் விஜயதாரணி பாஜக செல்ல திட்டமிட்டுள்ளார்“ என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே