மகாளய அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் ஏராளமானோர் நீராடி வழிபாடு

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச்சிறப்பான நாளாகும். அதுவும் இந்தமுறை சனிக்கிழமையில் வருவதால் மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.

இந்நாளில் புனித தலங்களில் உள்ள நீர் நிலைகளிலும், புனித நதிகளிலும் நீராடி மறைந்த முன்னோர்களுக்கு படையலிட்டும், தர்ப்பணம் கொடுத்தும் வழிபட்டால் கர்மா நீங்கி அவர்களது பரிபூரண ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் கருப்பு உளுந்து, கறுப்பு எள், வெல்லம், உப்பு, புத்தாடை போன்றவற்றை தானம் அளித்து வழிபடுவதும் மிகவும் சிறப்பு என கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

காசிக்கு நிகராக கருதப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் மேற்குபுறம் அமைந்திருக்கும் கமலாலய தீர்த்த குளத்தில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, மறைந்த தங்களுடைய முன்னோர்களுக்கு அரிசி, வாழைக்காய், தேங்காய், காய்கறிகள், பழங்கள் வைத்து தர்பணம் செய்து வழிப்பட்டனர்.

சென்னையில் உள்ள பிரசித்திபெற்ற மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில் குளத்தில் மகாளய அமாவாசையையொட்டி ஏராளமானோர் புனித நீராடினர்.பின்னர் படித்துறையில் அமர்ந்து மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, பித்ருகடன்களை நிறைவேற்றினர்.

திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி அம்மாமண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர். பின்னர் எள் தண்ணீர் இட்டு வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓதி பூஜை செய்து அதனை காவிரி ஆற்றில் விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

இந்த முறை மக்கள் கூட்டம் அதிகளவில் வந்ததால் போதிய போலீசார் இல்லாதநிலையில் நெரிசல் ஏற்பட்டு அவதியுற்றதாகவும், மேலும் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே வாகனங்கங்கள் நிறுத்தப்பட்டதால் நடந்தே சென்றதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

இதே போல அய்யாளம்மன், சிந்தாமணி, ஓடத்துறை ஆகிய காவிரி படித்துறையிலும் முன்னோர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் திதி கொடுத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே