தாக்குதல் எதிரொலி – கச்சா எண்ணெய் விலை உயர்வு

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 400 ரூபாய் முதல் 560 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 

சவுதி அரேபிய அரசின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவில் இருந்து தான் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், அராம்கோவின் எண்ணெய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளைக் குறிவைத்து கடந்த சனிக்கிழமை அன்று, ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஆளில்லா விமானங்கள் மூலம், ஏவுகணைகளை வீசியும், குண்டு மழை பொழிந்தும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால், குராய்ஸ் மற்றும் அப்கய்க் ஆகிய இடங்களில் உள்ள அரம்கோவின் எண்ணெய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கில் தீப்பற்றியது. வானை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பு எழுந்தது.

ஏமனில் அரசுக்கு எதிராக போராடும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இதன் காரணமாகவே அரம்கோவை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து வரும் ஈரான் தான், தாக்குதலுக்குக் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இந்தப் பிரச்சனைகளெல்லாம் ஒரு புறமிருக்க, எண்ணெய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கில் பற்றியும் எரியும் தீயைக் கட்டுப்படுத்த சவுதி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தீயைக் கட்டுப்படுத்தி மீண்டும் எண்ணெய் உற்பத்தியை சீரான நிலைமைக்கு கொண்டு வர சில வாரங்கள் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, நாளொன்று 5.7 மில்லியன் பேரல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு சவுதி அரேபியா ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெயின் இது பாதி அளவாகும். உலக அளவில் நடக்கும் உற்பத்தியில் இது 5 விழுக்காடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி முடங்கியுள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது.

இன்று கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடங்கிய போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10 முதல் 13 விழுக்காடு அளவுக்கு அதிகரித்தது.

159 லிட்டர் அளவு கொண்ட ஒரு பேரல் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை, 401 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 322 ரூபாயாக உள்ளது.

பிரெண்ட்  ரக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 560 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 865 ரூபாயாக இருக்கிறது. இந்த விலை உயர்வு, இந்தியச் சந்தையில் எதிரொலிக்கும் என்பதால், பெட்ரோல், டீசல் விலை உயரக் கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே