தலிபான் இயக்கத்தினருடன் டிரம்ப் நடத்தவிருந்த பேச்சுவார்த்தை ரத்து

ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தின் தலைவர்களுடன் நடத்தவிருந்த அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

காபூலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதன் விளைவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தையை ரத்து செய்து அறிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், தலிபான் தீவிரவாத இயக்கத்தின் சில முக்கிய தலைவர்களுடன் தாம், கேம்ப் டேவிட்டில் ஞாயிற்றுக்கிழமை இரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் அதிபருடனும் தனியாக பேச்சுவார்த்தை நடத்த இருந்ததாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள சமயத்தில், தலிபான்கள் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியிருக்கக் கூடாது எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

அதனால் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிட்டனர் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், அமெரிக்க வீரர் ஒருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர்.மேலும் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள குண்டஸ் (Kunduz) மற்றும் புலேகும்ரி (Pul-e Khumri) நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தாலிபான்கள் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே