தமிழகத்தின் தாஜ்மஹால் – மனைவிக்கு கோவில் கட்டிய கணவர்

காதலுக்கு நினைவுச்சின்னம் கட்டிய ஷாஜகான் குறித்து கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் தன்னை விட்டு பிரிந்து காற்றில் கலந்த தன் மனைவிக்கு கோவில் கட்டியிருக்கிறார் பாசம் குறையாத கணவர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த எருமையூரில் வசித்து வரும் ரவி மறைந்த தன் மனைவிக்காக கோயில் கட்டி அதற்கு கும்பாபிஷேகமும் செய்யவுள்ளார்.

14 அடி பீடத்தில் இரண்டு அடி உயர சிலையை வைத்து உள்ள கோயிலின் அளவு ஒன்பதுக்கு ஒன்பது அடியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தான் இறக்கும்வரை தன் மனைவி தன்னோடு தான் வாழ்கிறார் என்பதை மெய்ப்பிக்கவே இந்த கோயில் என்கிறார் ரவி.

ரவிக்கு மனைவி என்ற ஸ்தானத்தில் மட்டும் ரேணுகா முத்திரை பதித்து விடவில்லை தனது மகன்களுக்கும் தெய்வமாக தான் இருக்கிறார். அம்மா என்றவுடன் கண்ணீர் வடிக்கின்றனர் ரேணுகாவின் மகன்கள் சதீஷ் குமார் மற்றும் விஜய்.

தாரமாகவும் தாயாகவும் பாசத்தில் நெகிழச் செய்துவிட்ட ரேணுகா, அந்தக் குடும்பத்தின் குல தெய்வமாகவே மாறிவிட்டார். காதலால் உருகியவளையும், கர்ப்பத்தில் சுமந்தவளை கர்ப்பகிரகத்தில் வைத்து வழிபட தயாராகிவிட்டனர் ரவியின் குடும்பத்தினர்.

சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் விவாகரத்து வரை செல்லும் இன்றைய தலைமுறை, மறைந்த தன் மனைவிக்காக சிலை வைத்து கும்பாபிஷேகம் செய்யும் இவரைப் போன்ற உன்னதமானவரிடமிருந்து தாம்பத்திய உறவை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே